விஜய் நீட் தேர்வை எதிர்ப்பது வேடிக்கை... தளபதியை காமெடி பீஸ் ஆக்கிய பாஜக தலைவர்!
நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே நீட்டை எதிர்த்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதும், அதை விஜய் அவர்கள் ஆதரிக்கிறேன் என்பதும் வேடிக்கையானது என்று கரு.நாகராஜன் கூறுகிறார்.
தமிழக மாணவர்கள் வரவேற்கும் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் தீர்மானத்தை நடிகர் விஜய் ஆதரிப்பது வேடிக்கையானது என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நீட் எதிர்ப்பு என்று செயல்படும் அரசியல் கட்சிகளோடு இன்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயும் தன்னை சேர்த்துக் கொண்டுள்ளார். மக்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவம் படிக்க முன்வரும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்து அதை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு. அன்றைய காலகட்டத்தில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, அதை எதிர்த்து வாதாடி நீட் தேர்வை உறுதி செய்தது வழக்கறிஞர் திருமதி. நளினி சிதம்பரம் அவர்கள்.
இவ்வாறு நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே நீட்டை எதிர்த்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதும், அதை விஜய் அவர்கள் ஆதரிக்கிறேன் என்பதும் வேடிக்கையானது. உயர்கல்வி மத்திய அரசின் பொதுபட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் என்பதையும் அவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
தெறிக்க விட்ட தளபதி விஜய்... மாணவர்கள் முன் ரியல் ஹீரோவாக சம்பவம் செய்த தவெக தலைவர்!
NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் என்பது 1961- இல் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பு. பள்ளிக் கல்வியில் தரமான சிறந்த ஆலோசனைகளை வழிகாட்டுதல்களை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கிட உருவாக்கப்பட்டது. இதற்கென தனி பாடத்திட்டம் என்பது இல்லை. இப்படியெல்லாம் இருந்தால் பாடத்திட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்று வழிகாட்டும் அமைப்பாகும்.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்துவிட்டு NCERT பாடதிட்டத்தின் படி எப்படி மாணவர்கள் பரீட்சை எழுதுவார்கள் என்று கேட்கிறார். இரண்டுமே ஒன்றுதான் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பதும், NCERT ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதையும் விஜய் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தேர்வில் மாநில அதிகாரங்கள் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. பல்வேறு துறைகளில் போட்டித் தேர்வுகள் இருக்கிறது.
பல முக்கிய கல்லூரிகளில் பொறியியல் படிப்பிற்கு தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்துகிறார்கள் சட்டக் கல்லூரியில் படித்து முடித்தும் முழுமையான வழக்கறிஞர் பணியில் ஈடுபட முடியாது. தனியாக தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் தான் நீதிமன்றங்களில் முழுமையான வழக்கறிஞர் பணிகளில் ஈடுபட முடியும். நாட்டின் முக்கியமான உயர் பதவிகள் அனைத்திற்குமே தனியாக போட்டித் தேர்வுகள் இருந்து வருகின்றன. எல்லாவற்றையும் விட மருத்துவர் பணி என்பது உயர்ந்ததே.
அரசு பள்ளி மாணவர்கள், பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர், பட்டியல் சமுதாய மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பேசுகிறார்கள். நீட் தேர்வு வந்த பிறகு மேற்கண்ட மாணவர்கள் எவ்வளவு பேர் ஆண்டுதோறும் மருத்துவ இடங்களை பெறுகிறார்கள் என்பதையும் நீட் பரீட்சைக்கு முன்பு உத்தேசமாக ஒரு பத்தாண்டு காலத்தை எடுத்துக் கொண்டு மேற்கண்ட பிரிவினர் எத்தனை இடங்கள் கடந்த காலங்களில் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலில் தெரிந்து கொண்டால் மிக்க நல்லது.
எல்லோரும் அரசியலுக்காக பேசுவதை இவரும் பேசி இருக்கிறார் என்றே கருதுகிறேன். சமூக நீதியின் படி தமிழகத்தின் இட ஒதுக்கீடு கொள்கைப்படி அப்படியே 100% நீட் தேர்விலும் மாணவர் சேர்க்கையின் போது கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்கள் பலமுறை பரீட்சை எழுதும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது. எது எப்படி இருப்பினும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீட் இந்திய அளவில் நடந்து கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து பட்டியல் வெளியிட்ட நீங்கள் - நீட்டுக்கு முந்தைய ஆண்டுகளை குறிப்பிடும் போது அதை பூர்த்தி செய்யாமல் விட்டுள்ளது ஏன்? இந்தியாவிலேயே சராசரியாக நீட் பரீட்சை எழுதுவதிலும் தமிழக மாணவர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதையும் விஜய் புரிந்து கொள்வது நல்லது. நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் பரீட்சை எழுதி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 1,53,000 பேர் தேர்வெழுதி 89,600 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
ஒரு சில இடங்களில் திட்டம் போட்டு தவறு செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மை. TNPSC தேர்வுகள், சர்வேயர் தேர்வுகள் உள்பட தமிழகத்திலும் சில குளறுபடிகள் ஏற்பட்டன என்பதை நாம் அறிவோம்.அதற்காக ஒட்டுமொத்த திட்டத்தையும் குறை சொல்வது எப்படி நியாயம்?
மத்தியில் கூட்டணியில் இருக்கும் போதும், காங்கிரஸ் இருக்கும் போதும், மத்திய அரசு, மத்திய அரசு என்று அழைத்த திமுகவினர் இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று சொல்லத் தொடங்கினார்கள். அதில் திமுகவின் இயலாமையும் வெறுப்பும் வெளிப்பட்டது. அதேபோன்று இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜயும் ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லத் தொடங்கி இருப்பது கூட ஆச்சரியமாக ஆச்சரியம் அளிக்கிறது எப்படியோ அரசியல் பேச தொடங்கி இருக்கிறார்.
‘நீட்’ என்பதை எதிர்க்கட்சிகள் எல்லாம் பேசுகிறார்கள். எனவே, நாமும் பேசுவோம் என்பதைதான் அவர் பேச்சிலிருந்து உணர முடிகிறது. அதில் உள்ள பல்வேறு கருத்துக்களை நுட்பமாக அறிந்திருக்கிறாரா? என்பது தெரியவில்லை. மாணவர்களிடையே பேசுவதற்காக நீட்டை பேசி இருக்கிறார் அவ்வளவுதான். கல்வியாளர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்கும் நீட் தேர்வை, அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கும் கட்சிகள் கூட்டத்தில் விஜயும் இணைந்திருக்கிறார்."
இவ்வாறு கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமன்னாவின் ஆபீஸ் வாடகைக்கே இவ்ளோ செலவு ஆகுது! அப்ப சொத்து மதிப்பு எவ்வளவுன்னு பாருங்க...