Vijay Mallya Modi Sachin fight to fulfill the Food Security Act
மதுரை
உணவு பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று விஜய் மல்லையா, மோடி, சச்சின் டெண்டுல்கர் போன்று முகமுடி அணிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
“உணவு பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்,
ரேசன் பொருட்கள் விநியோகத்தை சீரமைக்க வேண்டும்,
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது,
வழிபாட்டுத் தலம், மருத்துவமனை, பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை அகற்ற வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மதுரை ஆட்சியர் செல்லும் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில், விவசாயி வேடமிட்ட ஒருவர் ஏர் கலப்பையுடன் பாம்பை கடித்து தின்பது போன்றும், விஜய் மல்லையா, மோடி, கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் ஆகியோரது முகமூடிகளை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர், பின்னர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் விஜயராஜன், நன்மாறன், அண்ணாத்துரை உள்பட 286 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
