தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் இந்த வாரம் நாமக்கல்லில் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய நடிகர் விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தாக்கி பேசி இருந்தார்.
TVK Vijay Speech : நடிகர் விஜய் இன்று நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய்யை பார்க்க இன்று காலை முதலே ரசிகர்கள் குவிந்து இருந்தனர். மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், சொன்ன நேரத்தை விட 6 மணிநேரம் தாமதமாகவே பிரச்சார இடத்துக்கு வந்தார் விஜய். வந்ததும், நாமக்கலின் பெருமையை பற்றி பேசிய விஜய். முட்டை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் ஊர் நாமக்கல் என்று கூறிய விஜய், போகப் போக திமுகவை தாக்கிப் பேசத் தொடங்கினார். அவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதை சுட்டிக் காட்டி பேசிய விஜய், அவர்களை மாதிரி பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம் என தெரிவித்தார்.
ஸ்டாலினை தாக்கி பேசிய விஜய்
தொடர்ந்து பேசிய அவர், புதுசா சொல்லுங்க, புதுசா சொல்லுங்கனு சொல்றாங்க, செவ்வாய் கிரகத்துல ஐடி கம்பெனி கட்டப்படும், காத்துல கல்வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும், வீட்டுக்குள்ளேயே ஏரேபிளைன் ஓட்டப்படும், இந்த மாதிரி அடிச்சு விடுவோமா... நம்ம முதல்வர் அடிச்சு விடுவாறே அந்த மாதிரி அடிச்சு விடுவோமா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார் விஜய். வருகிற தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டா அது பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரி.

மோசமான ஆட்சியை கொடுக்கும் திமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வரணுமா என விஜய் கேள்வி எழுப்பியதும், வேண்டாம் என அங்கு கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பினர். நாமக்கல்லில் உரை நிகழ்த்திய நடிகர் விஜய்க்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக நாகப்பட்டிணத்தில் அவர் உரையாற்றிய போது அவருக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு அவர் ஆட்சியை பிடித்து அரியணை ஏற வேண்டும் என வாழ்த்தி அவருக்கு நாமக்கலை சேர்ந்த தவெக தொண்டர்கள் செங்கோலை பரிசாக வழங்கி உள்ளனர்.
அந்த செங்கோலை கையில் ஏந்தி, வெற்றி நிச்சயம் என கூறினார் விஜய், நாமக்கல்லில் அதிகம் நேரம் பேசாமல் வெறும் 8 நிமிடத்தில் தன்னுடைய ஸ்பீச்சை முடித்துக் கொண்டார். அவருக்காக காலை முதலே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். அவர்களை பார்த்து கையசைத்தபடி, கரூருக்கு கிளம்பி சென்றார் விஜய்.
