திருச்சியில் இருந்து காரில் கொண்டவரப்பட்ட கணக்கில் வராத 39 லட்சம் ரூபாய் பணம் லஞ்ச ஒழிப்புதுறையினரால் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தன்னை பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகளை சமாதானம் செய்ய தான் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து சென்னைக்கு சென்றாக ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விசாரணையில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியில் ஆதி திராவிட நலத்துறை ஆணையராக இருப்பவர் சரவணக்குமார். அந்த துறையின் கீழ் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வசூலிக்கப்பட்டு, அந்த பணம் திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் கொண்டு செல்லப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் கிடைத்ததையடுத்து எல்லைப்பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி பிற்பகல் ஆதிதிராவிட நலத்துறை ஆணையர், லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணத்துடன் காரில் திருச்சியிலிருந்து சென்னை செல்வதாக உறுதியான நிலையில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எல்லையான மடப்பட்டு பகுதியில் அந்த கார் நுழைந்தபோது , கண்காணிப்பில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் காரில் சோதனையிட்ட போலீசார், 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்த பண பையை பறிமுதல் செய்தனர். அதில் மொத்தமாக 38 லட்சத்து 750 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, காரில் இருந்த அதிகாரி சரவணக்குமாரை விழுப்புரம் ஆதிதிராவிடர் நலத்துறை அலவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பணம் எப்படி வந்தது..? யாருடையது..? யாருக்கு கொடுக்க எடுத்து செல்லப்படுகிறது..? எனும் பல கோணங்களில் லஞ்ச ஓழிப்பு துறை போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சரவணக்குமாரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில், கடந்த ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளுக்கு சமையலர், காப்பாளர், உதவியாளர், ஒட்டுனர் உள்ளிட்ட 12 காலி பணியிடங்களுக்கு ஆட்களை நியமிப்பதில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. ஆட்சி மாறியதும் இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், சரவணக்குமாரை கடந்த 25 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இஞ்சினியரிங் பிரிவில் பணியாற்றும் கலைமோகன் என்பவரிடம், தன்னை பணியிடைநீக்கம் ரத்து செய்ய சொல்லி பேசியதாக கூறப்படுகிறது.அவரோ ஒரு பணியிடத்திற்கு 3 லட்சம் வீதம் 12 இடத்திற்கு 36 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் இந்த காரியத்தை முடித்து கொடுக்கும் எனக்கு 3 லட்சம் ரூபாய் தனியாக கொடுக்க வேண்டும் என்று கேட்தாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் கேட்ட 39 லட்சம் ரூபாய் பணத்துடன் சென்னைக்கு வந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கிக்கொண்டது விசாரணை தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சரவணக்குமார் உள்பட 4 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
