Victory for women who fought for a ten year old shop
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த சாராயக் கடை, மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று அதனை மூட சொல்லி பெண்கள் போராடிய நிலையில் அந்த சாராயக் கடை மூடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது ஏ.செட்டிப்பள்ளி கிராமம். இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சாராயக் கடையை இடையூறாக இருப்பதாக கூறி, அந்தப் பகுதி மக்கள் புகார் அளித்தனர். மேலும், அந்த கடையை அகற்றிட வேண்டும் எனவும் வெகு நாள்களாக கோரிக்கை வைத்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்தக் கடைக்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து, கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சூளகிரி தாசில்தார் பெருமாள் மற்றும் பேரிகை காவலாளர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், அந்தப் பகுதி பெண்களோ, கடையை அகற்றியே ஆக வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர்.
இதனையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு அதிகாரிகளின் அறிவுரைப்படி, அந்த சாராயக்கடை மூடப்பட்டது.
மேலும், கடையில் இருந்த ரூ.8 இலட்சம் மதிப்புள்ள சாராய பாட்டில்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரியில் உள்ள டாஸ்மாக் சாராய கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் இனிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
