துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் குறித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பேச்சுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் கொடுத்து துணை வேந்தர் வாங்கப்பட்டதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அண்மையில் கூறியிருந்தார். துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததைக் கண்டு நான் வருத்தமடைந்து, அதை மாற்ற நினைத்தேன் என்றும் ஆளுநர் கூறியிருந்தார். 

சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டபோது, ஆளுநர் பன்வாரிலால் இந்த கருத்தை கூறியிருந்தார். துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளது என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தமிழக ஆளுநரே இவ்வாறு கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கருத்தரங்கு ஒன்றில் கூறியிருந்ததற்கு, ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் கை மாறலுக்குப் பிறகே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை வேந்தர் நியமனத்ல் பணம் கைமாறியது பற்றி கல்வியாளர்கள் மூலம் தெரியவந்தது. அதனை தன்னால் நம்ப முடியவில்லை. 

நிலைமைகளைத் தான் மாற்ற முடிவு எடுத்ததாகவும், முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே 9 துணை வேந்தர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் ஆளுநர் கூறியதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. தனிப்பட்ட நபர்கள் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுநர் கூறவில்லை. குற்றச்சாட்டு பற்றிய ஆதாரம் தன்னிடம் இல்லை என்று ஆளுநர் கூறியதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.