Very heavy in 24 hours

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டிருப்பதால், தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என்றும் புதுச்சேரியிலும் கன மழை இருக்கும் என்றார்.

ஆனைக்காரன் சத்திரத்தில் அதிகளவில் இன்று காலை வரை 9 செ.மீ., மழையும், சீர்காழி, நாகப்பட்டினம் 6 செ.மீ., மழையும், சென்னை, காஞ்சிபுரம் 5 செ.மீ., மழையும், திருத்தணி, செங்கல்பட்டு 4 செ.மீ., மழையும், ரெட் ஹில்ஸ், சிதம்பரம், தாம்பரம், கடலூர் ஆகிய இடங்களில் 3 செ. மீ மழையும் பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே வரும் 3 ஆம் தேதி வரை தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திருவள்ளூர் - எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையடுத்து, புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அந்தந்த மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.