Asianet News TamilAsianet News Tamil

Ambulance accident:வீரர்களின் உடல்களை கொண்டு சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து..செல்லும் வழியில் பரபரப்பு!!

ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் பாதுகாப்பு காவல்களின் வாகனம் அடுத்தடுத்து விபத்திற்குள்ளானதாக பரபரப்பு ஏற்பட்டது. 

Vehicles involved in a series accident on the way
Author
Coimbatore, First Published Dec 9, 2021, 5:26 PM IST

ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் பாதுகாப்பு காவல்களின் வாகனம் அடுத்தடுத்து விபத்திற்குள்ளானதாக பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலைப்பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Vehicles involved in a series accident on the way

இதை அடுத்து பிபின் ராவத்தின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது.

Vehicles involved in a series accident on the way

குன்னூரில் இருந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டு சென்ற 13 ஆம்புலன்ஸ்கள் மேட்டுப்பாளையம் வழியாக சூலூர் விமானப்படைத் தளத்துக்கு சென்றன. அப்போது, காரமடை அருகே ஒரு ஆம்புலன்ஸ் திடீரென முன்னால் சென்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்த ஆம்புலன்ஸில் இருந்த வீரரின் உடல், வேறு ஆம்புலஸ்க்கு மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. இதேபோல், மேட்டுப்பாளையம் கல்லார் அருகே பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த திருப்பூர் அதிரடிப்படை போலீஸாரின் வாகனம் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

Vehicles involved in a series accident on the way

இதில், வாகனத்தின் முன்பகுதி சேதமானது. போலீஸார் லேசான காயங்களுடன் தப்பினர். இதையடுத்து, அப்பணிக்கு மாற்று போலீஸார் நியமிக்கப்பட்டனர்.  இருப்பினும், அணிவகுப்பில் இணைக்கப்பட்டிருந்த காலி ஆம்புலன்ஸ் மூலம் வீரரின் உடலை மாற்றி தொடர்ந்து சூலூர் நோக்கி கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் பொதுமக்கள் சாலைகளின் இரு ஓரமும் நின்று மலர்கள் தூவி தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios