காட்டுமன்னார்கோவில்,
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்குத் திறந்துவிடப்பட்ட நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 42 அடியை எட்டியது.
காட்டுமன்னார் கோவில் அருகே இலால்பேட்டையில் இருக்கிறது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருப்பது இந்த ஏரிதான். ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலமாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம். மேலும், சாதாரண காலங்களில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை, வெண்ணங்குழி ஓடை ஆகியன வழியாக வருவதுண்டு.
இந்த நிலையில் இந்த ஆண்டு வீராணம் ஏரி ரூ.40 கோடி செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டத்தை கடந்த ஜனவரி மாதம் முதலே குறைக்கப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தில் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் தங்களது நெற்பயிர்கள் கருகி வருகிறது எனவும், தங்களுக்கு பாசனத்துக்கு உரிய தண்ணீர் தரவேண்டும் எனவும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, ஏரியில் தண்ணீர் நிரப்பு முடிவு செய்தனர்.
இந்த நிலையில் கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணையை வந்தடைந்தது. பின்னர் கடந்த 24–ஆம் தேதி கீழணையில் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. விநாடிக்கு 200 கனஅடி என்கிற அளவில் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிப்பு செய்யப்பட்டு 300 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமை முதல் ஏரிக்கு வினாடிக்கு 1500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதாவது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஏரியில் 42 அடியை எட்டியிருந்தது.
தொடர்ந்து நீர் வரத்து இதே நிலையில் இருந்தால் விரைவில் ஏரி அதன் முழுகொள்ளளவை எட்டிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
