Vedanta Company Chairman and Sterlite Plant Arrested for Deteriorating Environment
தூத்துக்குடி
சுற்றுச்சூழலை சீரழித்த குற்றத்துக்காக வேதாந்தா நிறுவன தலைவர் மற்றும் ஸ்டெர்லைட் உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 12 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுமென்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சர்களை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட வேண்டும்.
சுற்றுச்சூழலை சீரழித்த குற்றத்துக்காக வேதாந்தா நிறுவன தலைவர் மற்றும் ஸ்டெர்லைட் உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
ஸ்டெர்லைட்டால் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலை சீரமைக்க பல ஆயிரம் கோடி தேவைப்படும். அதற்காக வேதாந்தா நிறுவன தலைவரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
புற்றுநோயால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 இலட்சம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே 72 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுத்தோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து, அதன் அடிப்படையில் கடந்த 26-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் கால அளவை குறைத்து மனுதாரர் போராட்டம் நடத்த விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதனை காவல்துறையினர் பரிசீலனை செய்து ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில் நேரத்தை பாதியாக குறைத்து 36 மணி நேரம் போராட்டம் நடத்த, காவல்துறையினரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால், அதற்கும் அவர்கள் அனுமதி தரவில்லை.
வெறும் 12 மணி நேரம் போராட்டம் நடத்த அனுமதி கொடுத்துள்ளனர். அதாவது வருகிற 5-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உள்ளனர்.
இதனை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இது முழுக்க முழுக்க மக்கள் போராட்டத்தை நடத்த கூடாது என்பதற்காகவே அரசும் ஆட்சியாளர்களும், காவல்துறையும் திட்டமிட்டு நடத்துகிறார்கள்.
இந்த 12 மணி நேர போராட்டத்தை எப்படி நடத்துவது என்பதை எங்கள் அமைப்பு கூடி முடிவெடுத்து போராட்டத்தை நடத்துவோம்" என்று அவர் கூறினார்.
