ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரம் ஓய்வதற்குள் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதில் காவிரி டெல்டாவின் 3 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 3-ல் வேதாந்தா குழுமத்துக்கு 2-ம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு 1-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை அமைத்து தூத்துக்குடியை மனிதர்கள் வாழ தகுதியற்ற பிரதேசமாக்கி வைத்திருக்கிறது வேதாந்தா குழுமம். இந்த தொழிற்சாலையை மூட வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் வேதாந்தா குழுமம் கால் பதித்த எந்த இடத்திலும் சுற்றுச் சூழல் விதிகளை ஒருபோதும் இந்நிறுவனம் பின்பற்றியதே கிடையாது. ஜாம்பியாவில் கஃபூ நதியையே நாசமாக்கியது இதே வேதாந்தா குழுமம்தான். இதற்கான சட்டப் போராட்டங்களை பாதிக்கப்பட்ட ஜாம்பியா மக்கள் முன்னெடுத்தனர். வேதாந்தா குழுமத்தின் அப்பட்டமான விதிமீறல்களை சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தின. லண்டன் நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடைபெற்றன.

  

இந்தியாவில் ஒடிஷாவின் நியாம்கிரி மலையை கைப்பற்ற துடித்தது வேதாந்தா குழுமம். லாஞ்சிகரில் அமைத்த அலுமினியம் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கான பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்கத்தான் நியாம்கிரி மலையை அபகரிக்க முனைந்தது வேதாந்தா குழுமம். ஆனால் நியாம்கிரி மலையை தெய்வமாக வழிபடும் ஆதி பழங்குடிகளின் வீரம்செறிந்த போராட்டங்களால் மூக்குடைபட்டு தொழிற்சாலையை இழுத்து மூடியது வேதாந்தா.

சத்தீஸ்கரின் கோபா மின்நிலையத்தால் சிக்கல், 40 பேர் பலி என்கிற சரித்திரத்தை கொண்டது வேதாந்தா குழுமம். கோவாவில் முறையான சுற்றுச் சூழல் அனுமதி பெறாமல் இரும்புத் தாது சுரங்கம் நடத்திய நிறுவனம் தான் இந்த வேதாந்தா. ராஜஸ்தானில் ராக் பாஸ்பேட் சுரங்கத்துக்கும் முறையான சுற்றுச் சூழல் அனுமதி பெறாத நிறுவனம் இதே வேதாந்தாதான்.

இப்படி உலக நாடுகள் அனைத்திலும் முறைகேடுகளின் முகவரியாக ‘திகழுகிற’ வேதாந்தா இப்போது காவிரி டெல்டாவுக்கும் வருகிறதாம். ஏற்கனவே நெடுவாசல், கதிராமங்கலம், தூத்துக்குடி என தமிழகத்தின் பல இடங்கள் போராட்ட களங்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் மத்திய அரசு சர்ச்சைக்குரிய வேதாந்தா குழுமத்துக்கே இப்போது ஹைட்ரோகார்பன் எடுக்கும் அனுமதியையும் வழங்கியிருக்கிறது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் ஏற்கனவே பாலைவனமாக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது பாழாய்ப் போன வேதாந்தா கால் பதிக்க இருப்பது அங்கே பெரும் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.