திருச்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும், வணிகர்கள் கடைகளும் அடைத்தும் போராடினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, திருச்சி மாவட்டப் பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நேற்று துறையூரில் பேருந்து நிலையம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நகரச் செயலாளர் முரளி தலைமையில், துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார், மாவட்ட பொருளாளர் தர்மன்ராசேந்திரன், பேச்சாளர் பாண்டியன், கொப்பம்பட்டி மணிவண்ணன் உள்பட ஏராளமானவர்கள் இதில் பங்கேற்றனர்.

அதேபோன்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி துறையூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்றப் புறக்கணிப்பு செய்தனர். பின்னர் சங்க தலைவர் தென்னரசு தலைமையில் செயலாளர் செல்லதுரை, வழக்கறிஞர்கள் செந்தில்குமார், உத்ராபதி, ஜெகநாதன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் திருச்சி - துறையூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதேபோல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முசிறி நகரில் உள்ள உணவு விடுதிகள், நகை கடைகள், மளிகை கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் உப்பிலியபுரம் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை கடைகள் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.