Various political parties are fasting with people in Nilgiris Why?
நீலகிரி
பிரிவு-17 நிலத்தில் உள்ள கட்டடங்களை இடிக்க வந்த அரசு அதிகாரிகளை கண்டித்து நீலகிரியில் பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களோடு சேர்ந்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் முடிவு செய்யப்படாத பிரிவு-17 வகை நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணியில் கடந்த 6-ஆம் தேதி வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.
இந்த செயலுக்கு மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும், கூடலூர் காளம்புழா பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தை வருவாய் துறையினர் இடிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர்.
இதனிடையில் ஏற்கனவே போடப்பட்ட வழக்கை விசாரித்த கூடலூர் நீதிமன்றம் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனையொட்டி கட்டடம் இடிக்கும் பணியை வருவாய் துறையினர் கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து கூடலூரில் அரசியல் கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரிவு-17 நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க முயற்சி செய்து வரும் அரசு அதிகாரிகளை கண்டித்து தி.மு.க., காங்கிரசு, முஸ்லிம் லீக், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
கூடலூர் காந்தி திடலில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, "பிரிவு-17 வகை நிலத்தில் குடியிருக்கும் விவசாயிகள், மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் மின் இணைப்பு வழங்கியது போல அனைத்து மக்களுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும்.
பிரிவு-17 நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க முயன்ற அரசு அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிப்பது" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த உண்ணாவிரதத்தில் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுநல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மக்கள் பலர் பங்கேற்றனர்.
