முத்தூர்,

முத்தூர் அருகே நடந்த மாட்டு சந்தையில், நாட்டு மாடுகள் இரக இரகமாக விற்பனைக்கு வந்தன, இதில், மாடுகள் இலட்சக்கணக்கில் விற்கப்பட்டன. குறிப்பாக, காரி இன பசு ஒன்று ரூ.1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு விற்பனையானது.

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகேயுள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு சந்தை நடைப்பெற்றது.

நத்தக்காடையூர், பழையகோட்டை நகர மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் இன பெரிய பூச்சிக்காளைகள், இளம் பூச்சிக்காளைகள், மயிலை பூச்சிக்காளைகள், மயிலை மாடுகள், கிடாரி மாடுகள், பர்கூர் உம்பளசேரி, மயிலை மாடுகள், செவலை மாடுகள், காரி மாடுகள் மற்றும் எருதுகள் ஆகிய மாடுகளை விற்பனைக்காக, இந்தச் சந்தைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதில் காங்கேயம் இன மாடுகள் ஒவ்வொன்றும் இரகம் வாரியாக பிரிக்கப்பட்டு தனியாகவும், கன்று ஜோடிகளாகவும் ரூ.20 ஆயிரம் முதல், ரூ.4 இலட்சம் வரை விலை கூறப்பட்டன.

திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகள், கால்நடை வியாபாரிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த கால்நடைகளை இடைத்தரகின்றி விலை கொடுத்து வாங்கி சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 175 காங்கேயம் இன நாட்டு மாடுகள், காளைகள், எருதுகள், கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், கடந்த வாரம் 120 காங்கேயம் இன கால்நடைகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

மேலும் இந்த புகழ் பெற்ற காங்கேயம் இன கால்நடை சந்தையில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்சமாக மயிலை கிடாரி கன்று ஒன்று ரூ.20 ஆயிரத்திற்கும், அதிகபட்சமாக காரி இன பசு ஒன்று ரூ. 1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.