சென்னை தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 36 பேர், 7 முதல் 8 குழுக்களாக பிரிந்து தேனி மாவட்டம் கொழுக்குமலை-குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுக்கு வழிகாட்ட 4 பேர் சென்றுள்ளனர். அந்த காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயில் 40 பேரும் சிக்கினர். இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்ட 27 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கமல் டுவிட்டரில் அனுதாபங்களை தெரிவித்திருந்தார். மேலும் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்கள் உயிர் பிழைக்க விழைந்திருந்தார்.

இந்நிலையில், குரங்கணி தீ விபத்தில் இறந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து, இரங்கல் கவிதை எழுதி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதில், உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.

“சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.

இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம் என வைரமுத்து வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.