டிவிஎஸ் சேர்மனுக்கு குவிகிறது ஆதரவு!! பொங்கி எழுந்த வைகோ
சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் பெற்றிருக்கும் டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சிலைகள் மற்றும் புராதன பொருட்கள் திருடுபோனது தொடர்பான வழக்கில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி முன் ஜாமீன் பெற்றார் வேணு சீனிவாசன்.
இந்நிலையில், வேணு சீனிவாசனுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சிலை கடத்தலில் வேணு சீனிவாசனுக்கு தொடர்பு என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர் மிகவும் நல்லவர். விசாரணையில் எதோ தவறு இருக்கிறது. என்னால் இதை நம்பவே முடியவில்லை என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேணு சீனிவாசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அறவழியில் நடப்போர் மீது வழக்குத் தொடுப்பதும், தவறு செய்யாத ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதும் சகிக்க இயலாதது. அவரை அக்குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை நீக்கி அறிவிக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நேர்மையானவர், தொழிலதிபர் டி.வி.எஸ். குழுமத்தின் வேணு சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் கேட்டிருப்பதாகவும் செய்தி அறிந்து திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்தேன். இந்தியாவிலேயே புகழ்பெற்ற தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழுமம், இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளித்துள்ளது.
வேணு சீனிவாசன் தமிழ்நாட்டில் நான்காயிரம் கிராமங்களில் முப்பது இலட்சம் மக்களுக்கு புதுவாழ்வு தந்துள்ளார். அண்டை மாநிலங்களில் ஆயிரம் கிராமங்களிலும் அனைத்து சமூக மக்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் அங்குள்ள பெண்களுக்கு கூடை முடைதல், பாய் பின்னுதல், நெசவுநெய்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற தொழில்கள் சுய வேலைகளுக்கு நிதி உதவி தந்து, ஒரு இலட்சத்து 68 ஆயிரம் மகளிர் வருடத்திற்கு 680 கோடி ரூபாய் வருமானம் பெற வழிவகுத்தார்.
இந்த செய்தியை கிராமங்களில் உள்ள மக்கள் மூலம் நான் அறிந்தபோது, ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று மனம் நெகிழ்ந்தேன். இதுகுறித்து அவர் எந்தவிதத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை. நான் அவரிடம் நெருங்கிப் பழகியது இல்லை. இதனை அறிந்ததனால் ஓராண்டு முன்னர் அவரைச் சந்தித்து, அவர் செய்யும் மனிதாபிமான தொண்டுகளைக் கேட்டு அறிந்தேன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 104 கண்மாய்களில் தன் சொந்தச் செலவில் தூர் வார ஏற்பாடு செய்தவர். சென்ற வருடத்தில் மட்டும் இவரது முயற்சியால் 733 கோடி லிட்டர் மண் தூர் வாரப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின்போது முதல்வர் கருணாநிதியும், அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதாவும் தமிழகத்தின் திருக்கோயில்களில் திருப்பணிகளைச் செய்வதற்குரிய பொறுப்புக்களை வேணு சீனிவாசன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அதிமுக ஆட்சியில் 1995-ம் ஆண்டு தொடங்கி, திமுக ஆட்சியில் கருணாநிதி ஆட்சியில் நிறைவுசெய்யப்பட்ட நவ திருப்பதி கோவில்களின் திருப்பணியும், குடமுழுக்காட்டும் வேணு சீனிவாசன் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நெல்லை மாவட்டம் வரையிலும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவ திருப்பதி என்று அழைக்கப்படும் ஒன்பது வைணவக் கோயில்களுக்கும் வேணு சீனிவாசன் அவர்கள் ஏற்பாட்டில் திருப்பணியும் குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது.
ஆங்காங்கு உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் அவர்களால் இயன்ற அளவு நிதியைப் பெற்று, தானே இருபது கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திருப்பணியில் ஈடுபட்டார். 2015-ம் ஆண்டு வேணு சீனிவாசன் திருவரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
வேணு சீனிவாசன் தன்னுடைய சொந்த அறக்கட்டளையிலிருந்தே திருப்பணிக்கு 25 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்.
தமிழகத்திலும், கர்நாடகா, கேரளத்திலும் உள்ள நூறு ஆலயங்களுக்கு தனது சொந்த அறக்கட்டளை பணத்திலிருந்து செலவழித்து திருப்பணி செய்திருக்கிறார். கோயிலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் வேணு சீனிவாசனையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏர்வாடி பகுதியில் அனைத்துச் சமயங்கள், சாதிகள் சார்ந்த மக்களை ஒருங்கிணைத்தே அந்தந்த ஊர்களில் மகளிர் சுயஉதவி நிதி, கண்மாய்கள் சீரமைப்பு ஆகியவற்றை தனது சொந்த அறக்கட்டளை நிதியிலிருந்து செய்து வரும் செயலை எவ்விதத்திலும் அவர் விளம்பரப்படுத்திக்கொள்வது இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.
தமிழ் மொழியின்பால் பற்றும், தமிழ் இலக்கியங்கள்பால் உயர்ந்த ஈர்ப்பும் கொண்டுள்ள வேணு சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தமிழக அரசு உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும்.
அறவழியில் நடப்போர் மீது வழக்குத் தொடுப்பதும், தவறு செய்யாத ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதும் சகிக்க இயலாதது. அவரை அக்குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை நீக்கி அறிவிக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.