காவல் ஆய்வாளர் உதைத்ததில் விழுந்து உயிரிழந்த உஷா கர்ப்பமாக இல்லை என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உஷா, 3 மாத கர்ப்பிணியான மனைவியுடன், திருச்சியில் நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்றார்.

அப்போது, திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை மறித்த்துள்ளனர். வ்கனம் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றதை அடுத்து, இரு சக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று எட்டி உதைத்திருக்கிறார்.

இதில் நிலை தடுமாறிய உஷா மற்றும் அவரது கணவர் ராஜா இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உஷாவின் உடலை மடியில் வைத்துக் கொண்டு கதறியழுத அவரது கணவர் ராஜா, தனது மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார். 

இந்நிலையில் உஷாவின் உடற்கூறாய்வு முடிவுகளை, திருச்சி மருத்துவக்கல்லூரி டீன் அனிதா, மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அதில் உயிரிழந்த உஷா கர்ப்பமாக இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக மாவட்ட எஸ்.பி. கல்யாண் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.