கரூர்
 
கேரளாவை போல பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்ற ரோபோ எந்திரத்தினை பயன்படுத்தும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கரூரில் ஆதித் தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வலியுறுத்தினர்.

கரூர் மாவட்ட ஆதித் தமிழர் பேரவையினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் மாவட்டச் செயலாளர் முல்லையரசு தலைமை வகித்தார். 

மாவட்டத் தலைவர் சண்முகம், மாவட்டத் துணைச் செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிதிச் செயலாளர் பெருமாவளவன், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பெரியர்தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "கழிவுநீர் தொட்டி போன்றவற்றை நேரடியாக தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்வதால் அடிக்கடி விஷவாயு தாக்கி மரணம் நிகழ்கிறது. எனவே, இதனை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்டவற்றை பணியாளர்களை வைத்து அகற்றாமல், கேரளாவை போல் "பாண்டிகூட் ரோபோ" எந்திரத்தினை பயன்படுத்தும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2015-ஐ நடைமுறைப்படுத்திட வேண்டும். 

வீடு - நிறுவனங்களில் உள்ள கழிவுநீர் தொட்டி உள்ளிட்டவற்றில் மனிதனை பணி செய்ய நிர்பந்திக்க கூடாது.

கரூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் இவைகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் கந்தசாமி, தந்தை பெரியார் திராவிட கழக மாவட்டத் தலைவர் தனபால் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.