தொண்டி,
சின்னத் தொண்டி கிராம ஊருணி கரையில் போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம், ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அகற்றினர்.
தொண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட சின்னத்தொண்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் புதுஊருணி உள்ளது. இந்த ஊருணி கரையில் பலர் முள் வேலி, மாட்டு கொட்டகை, மற்றும் குடிசைகள் போட்டு ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் பொதுமக்கள் ஊருணியில் தண்ணீர் எடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சின்னத்தொண்டி புது ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து புது ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் திருவாடானை தாசில்தார் சுகுமாறன், தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, துணை தாசில்தார் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அரசு ஆவணங்களின்படி முதற்கட்டமாக இடத்தை அளவீடு செய்தனர்.
அதன்பின்னர் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊருணி கரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.
அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மகளிர் குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த ஊருணி கரையில் இருந்த மா, புளிய மரம் போன்றவற்றையும் அகற்ற வேண்டும் என ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அதிகாரிகள் கருவேல மரங்களை மட்டுமே அகற்ற முடியும் என்றும் பலன் தரும் மரங்களை அகற்ற முடியாது எனவும் தெரிவித்தனர். அதன்பின்னர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
