urgent law for neet wil be given tomarrow

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் அவசர சட்டம் குறித்து நாளையே மத்திய அரசிடம் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு என்பது தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்துக்கு ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்த அவசர சட்ட வரைவு நாளையே மத்திய அரசிடம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதார துறை செயலாளர் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாகவும் தெரிகிறது.