Updating mankammal road after 11 years MLA.Vasantha inaugurated

திருநெல்வேலி

திருநெல்வேலி கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலை புதுப்பிக்கும் பணியை நான்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எச்.வசந்தகுமார் தொடங்கி வைத்தார். 11 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் இருந்த சாலை இப்போதுதான் புதுப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கேடிசி நகர் மங்கம்மாள் சாலையானது 11 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கபடாமல் உள்ளதால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

இது தொடர்பாக எம்எல்ஏ எச்.வசந்தகுமாரிடம், தொகுதி மக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, இந்தச் சாலையைப் புதுப்பித்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதிய சாலை அமைக்கும் பணியானது பாளையங்கோட்டை கீழநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

“தேர்தல் நேரத்தில் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி அனைத்துப் பணிகளையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறோம்.

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட சாலைகளை புதுப்பிக்க முதல்கட்டமாக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

தாமிரவருணி – கருமேனி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விரைவுபடுத்தி நதிகளை இணைக்க ஆவன செய்ய வேண்டும்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக நான்குனேரி தொகுதிக்கென ரூ.29 இலட்சம் செலவில் ஜேசிபி இயந்திரம் அளித்துள்ளேன். இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு தொகுதிக்குள்பட்ட அனைத்துக் குளங்களையும் மராமத்து செய்து நீராதாரத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதுடன், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி பயிற்சிகளும் நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், தேசிய நல்லாசிரியர் செல்லப்பா, வட்டாரத் தலைவர் டியூக்துரைராஜ் மற்றும் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.