இராமநாதபுரம்

வலையில் சிக்கும் அரிய வகை சிங்கி இறால் மீன்கள் கையில் எடுத்ததும் அதிக வெப்பம் காரணமாக உடனே இறந்து விடுகிறது. இந்த வகை மீன்கள் உயிரோடு இருந்தால் இதன் விலையே தனி. உடனே இறப்பதால் இந்த மீன்கள் விலை குறைவாக விற்கப்படுகிறது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அரிய வகை மீன் இனத்தைச் சேர்ந்தவை சிங்கி இறால் மீன்கள். இவை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வலையில் சிக்கியவுடன் இறந்து விடுகின்றன. இதனால் அந்த மீன்களுக்கான விலை குறைந்து வருவதால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி கடந்த மாதம் 15–ஆம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள விசைப் படகுகள் கடலில் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த 45 நாள் தடை காலம் நாட்டுப் படகுகளுக்கு இல்லாததால் இராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள நாட்டுப் படகுகளில் மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து ஒரு நாட்டுப் படகில் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் காலை கரை திரும்பினர்.

அவர்களின் வலையில் ஒரு கிலோ எடை கொண்ட அரிய வகை மணி சிங்கி இறால் மீன் ஒன்று இறந்த நிலையில் சிக்கியிருந்தது. மீனவர்கள் பிடித்து வந்த அந்த சிங்கி இறால் மீனை வியாபாரி ஒருவர் ரூ.2 ஆயிரத்து 700 கொடுத்து வாங்கிச் சென்றார். மீன்களிலேயே அதிக விலை கொண்ட மீன் இந்த சிங்கி இறால் மீன்கள்தான்.

கடந்த பிப்ரவரி மாதம் வரை ஒரு கிலோ சிங்கி இறால் மீன் ரூ.4 ஆயிரத்து 500–க்கு விற்பனையானது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மீனவர்கள் பிடித்து வரும் சிங்கி இறால் மீன்கள் அதிரடியாக விலை குறைந்து வருகிறது. இதனால் நாட்டு படகு மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி மீன் வியாபாரி ஒருவர் கூறியது:

“சிங்கி இறால் மீனுக்கு, அதிக வெப்பத்தை தாங்கும் சக்தி கிடையாது. கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மீனவர்கள் வலையில் சிக்கும் சிங்கி இறால் மீன், வலையை விட்டு வெளியே எடுத்த சிறிது நேரத்தில், அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் சிங்கி இறால் மீன்கள் இறந்து வருகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் வரை மீனவர்கள் வலையில் சிக்கிய சிங்கி இறால் மீன்கள் வலையில் இருந்து எடுத்து சிறிது நேரம் வரை உயிருடன் இருக்கும். அந்த மீனை பிளாஸ்டிக் கூடையில் வைத்து படகில் உள்ள ஐஸ் பாக்சில் போட்டு மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்து உயிருடன் வியாபாரிகளிடம் விற்பனை செய்வர்.

அப்படி உயிருடன் உள்ள சிங்கி இறால் மீனுக்கு தான் விலை அதிகம். உயிருடன் உள்ள சிங்கி இறால் மீன் ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்து 200 வரை விலை போனது.

ஆனால், தற்போது வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு வெப்பம் நிலவி வருகிறது. இதனால் வலையில் இருந்து எடுத்த சிறிது நேரத்திலேயே சிங்கி இறால் மீன்கள் இறந்து விடுவதால், ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 700 க்கு குறைந்து விட்டது.

இந்த வகை மீன்கள் சிங்கப்பூர், சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன” என்று அவர் கூறினார்.