காங்கிரஸ் பெயரில் ஆதாரமற்ற தொகுதி பட்டியல்: கோபண்ணா விளக்கம்
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியும் திமுகவுடன் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்றும் திமுகவிடம் தொகுதிப் பட்டியல் எதையும் வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் என வெளியாகியுள்ள பட்டியல் ஆதாரமற்றது என்றும் காங்கிரஸ் கட்சி எந்த பட்டியலும் வெளியிடவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணா விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளின் பட்டியல் என்று சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல் தவறானது என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, "2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியும் திமுகவுடன் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது, எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பன குறித்து பேசியதாகவும் திமுகவிடம் தொகுதிப் பட்டியல் எதையும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
2024ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக தொகுதிப் பங்கீடு குழு சார்பில் டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், க.பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குா்ஷித், தமிழகப் பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றனர்.