மனைவியின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கொலை செய்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, வயலுக்கு இரவு காவல் சென்றவர் சக்தி தேவையன் (34). இவர், எஸ்தர் செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள்
உள்ளனர்.

சக்தி தேக்கையன், கடந்த சில வருடங்களாக பொதுப்பணித்துறையில் மணல் குவாரியில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக, நெல் அறுவடைக்காக வயலில் இரவு நேரங்களில் காவல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வயலுக்கு சென்றவர், கழுத்தறுபட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சக்தி தேக்கையன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து எஸ்தரின் தாய் வீட்டுக்கு சென்று நின்றது.

இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் சக்தி தேக்கையன் மனைவி எஸ்தர் செல்விக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் அஜித் (25) என்பவருக்கும் சில வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளதாம். 

இதனை அறிந்த சக்தி தேக்கையன், அவர்கள் இருவரையும் கண்டித்தாராம். இது குறித்து எஸ்தர் செல்வி, அஜித்திடம் கதறி அழுதுள்ளாராம். இந்த நிலையில், வயலுக்கு காவல் சென்ற சக்தி தேக்கையனை எஸ்தர் செல்வி, அஜித், அவரது நண்பர்கள் அருண், வினோத் உள்ளிட்டோர் கடந்த ஞாயிறு அன்று இரவு 11.30 மணியளவில் சக்தி தேக்கையனை கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து
லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.