மதுரை நகரில் பாதாள சாக்கடை இரும்பு மூடிகள் காணாமல் போகும் நிலையில், பயன்பாட்டில் உள்ள மூடிகளையும் அதிகாரிகள் மாற்றி வருகின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட பாதாளசாக்கடை திட்டங்களில் இரும்பு மூடிகள் உள்ளன. அதிக எடை கொண்ட இம்மூடிகளின் மதிப்பு 30 ஆயிரம் ரூபாய். நகரில் இந்த இரும்பு மூடிகள் பல இடங்களில் குறிவைத்து திருடப்பட்டன, திருடப்படுகின்றன.

பாதாளசாக்கடை பணிகள் நடக்கும் இடங்களில் இரும்பு மூடிகள் இருந்தால் அதை மாநகராட்சி அகற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

தற்போது நரிமேடு பகுதியில் நடக்கும் பணிகளில் பல இரும்பு மூடிகளை மாநகராட்சி அகற்றி சிமென்ட் மூடிகளை அமைத்துள்ளது.

இரும்பு மூடிகளை மாநகராட்சி குடோனில் உதவி பொறியாளர்கள் ஒப்படைக்க வேண்டும். ஆனால், ஒப்பந்ததாரர்கள் மூலம் இரும்பு மூடிகள் விற்கப்படுகிறது.

கான்கிரீட் மூடிகளின் மதிப்பு 18 ஆயிரம் ரூபாய். இது சிலநாட்களில் உடைந்து விடுகிறது. ஆனால் இரும்பு மூடிகள் உடையாமல் பல ஆண்டுகள் பயன்தரக்கூடியது.

அகற்றப்பட்ட இரும்பு மூடிகள் அனைத்தும் குடோனில் உள்ளனவா என ஆய்வாளர் சந்தீப் நந்துாரி சோதனை நடத்தி, மீண்டும் இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.