மிக சமீப காலத்தில் தேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தீர்ப்பு என்றால் உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் தந்துள்ளதுதான். சங்கரின் மனைவி கெளசல்யாவின் அப்பா சின்னச்சாமி உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை உட்பட பல தண்டனைகளை அள்ளிக்கொட்டி சாதி வெறியாட்டத்தை மூச்சுவிட முடியாமல் திணறடித்திருக்கிறது இந்த தீர்ப்பு. 

இந்த தீர்ப்பினால் உள்ளபடியே அகமகிழ்ந்து கிடக்கிறார் சங்கரின் மனைவியான கெளசல்யா. தூக்கை எதிர்த்து தன் அப்பா சின்னச்சாமி மேல்முறையீடு செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், விடுதலையான தனது அம்மாவை கைது செய்ய கோரியும் அடுத்தகட்ட சட்ட விஷயங்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் இந்த தூக்கு தண்டனை பற்றி தமிழகத்தின் மிக முக்கிய கட்சிகள் பெரிதாய் வரவேற்பு விமர்சனம் வைக்கவுமில்லை, கருத்து தெரிவிக்கவுமில்லை. இது குறித்துப் பேசியிருக்கும் கெளசல்யா “நம் மாநிலத்தில் அரசியலமைப்புகள் அத்தனையும் தேர்தலை நம்பியே காலம் தள்ளுகின்றன. தேர்தல் அரசியலென்பது சாதி வெறிக்கு துணைபோகிற ஒன்றாகவே தெரிகிறது. சங்கர் கொல்லப்பட்டபோதே முக்கியமான அரசியல் கட்சிகள் மெளனம் காத்தன. அவர்கள் சில எதிர்மறையான செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். 

ஆனால் இப்போது வரை பெரியாரிய - அம்பேத்கரிய இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக நீதி அமைப்புகள் போன்ற அனைவருமே எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அதனால் நான் தனித்துவிடப்பட்டோ, நிற்கதியாகவோ இல்லை. 

பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவு நமக்கில்லாமல் போய்விட்டதே என்று நான் கவலைப்படவோ, ஏக்கம் கொள்ளவோ இல்லை. சாதி வன்கொடுமைகள், ஆணவக்கொலைகளை எதிர்க்காதவர்களெல்லாம் இங்கே தேர்தலில் வெற்றி பெறுவது விநோதமாக இருக்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்கும் கட்சிகள் பெரிதாய் வெற்றியடைவதில்லை. 

இந்த நிலை மாறவேண்டும், மாறும்!”  என பொரிந்து தள்ளியிருக்கிறார்.