சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!
சென்னை புத்தகக் காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான 47ஆவது சென்னை புத்தகக் காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜனவரி 3ஆம் தேதி (இன்று) முதல் வருகிற 21ஆம் தேதி வரை சென்னை புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் புத்தகக் காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சார்பில் ‘முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி’ விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்தை 6 சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கினார். சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கியும் கவுரவித்தார்.
மக்களவை தேர்தல் 2024: முதல் ஆளாய் வேட்பாளரை அறிவித்த நிதிஷ்குமார்; கூட்டணிக்குள் புகைச்சல்!
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு பதிப்பாளராக புத்தகக் காட்சிக்கு வந்துள்ளேன். புத்தகங்களை வாங்காவிட்டாலும், அரங்கங்களுக்குச் சென்றாவது புத்தகங்களைப் படியுங்கள்” என்றார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் YMCA உடற்பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தோம். தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தியை எடுத்துரைத்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் (BAPASI) சார்பில் ‘முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி’ விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்தை 6 சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கி வாழ்த்தினோம்.
மேலும், #BAPASI சார்பில் சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தோம். திமுக இளைஞரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 9 நூல்கள் உட்பட லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்தமிழர்களின் அறிவுத்திருவிழாவாக நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சி சிறக்கட்டும். புத்தக வாசிப்பு அறிவின் புதுப்புது கதவுகளை திறக்கட்டும்!” என பதிவிட்டுள்ளார்.
இந்த புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், இந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணங்களால் அவரால் இதனை தொடங்கி வைக்க இயலவில்லை. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: “சென்னையில் நடைபெறும் 47-வது புத்தக கண்காட்சி பெரும் வெற்றி அடையட்டும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்றி. கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருதுகள் பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். தவிர்க்க இயலாத காரணங்களால் கண்காட்சியை தொடங்கி வைக்க இயலாததற்கு வருந்துகிறேன். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரூ.6 கோடி செலவில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வருகிற 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.