மிஸ்டர் செல்லாக்காசு: பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
பிரதமர் மோடியை மிஸ்டர் செல்லாக்காசு என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி, “மோடி நல்ல வடை சுடுவார் ஆனால் நமக்கு தர மாட்டார். இந்தியா கூட்டணி ஜெயிப்பது உறுதி என மக்கள் செல்லும் இடமெல்லாம் கூறுகிறார்கள். நீங்கள் வாக்குச்சாவடியில் உதயசூரியன் பட்டனில் வைக்கும் அமுக்கு மோடிக்கு வைக்கும் வேட்டு. போனமுறை நமது எதிராளிகள் எல்லாம் ஒன்றாக நின்றார்கள். ஆனால் தற்போது பிரிந்து நிற்கிறார்கள். இந்த முறை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் செல்வத்தை வெற்றி பெற வைத்தால் மாதத்திற்கு இரண்டு முறை காஞ்சிபுரத்திற்கு வந்து அவருடன் சேர்ந்து பணியாற்றுகிறேன்.” என உறுதியளித்தார்.
இது நான் உங்களுக்கு கொடுக்கிற உறுதிமொழி, நான் சொன்னால் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவேன். நான் கலைஞரின் பேரன் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், 29பைசா நாணயத்தின் புகைப்படத்தை காட்டி, தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்த நிதி பங்கீடு தான் இது. எனவே, மிஸ்டர் செல்லாக்காசு என பிரதமர் மோடியை கூறுங்கள் என விமர்சித்தார். அடுத்தபடியாக மற்றொரு புகைப்படத்தை காட்டி இவர் தான் முன்னாள் முதலமைச்சர் பாதம் தாங்கி பழனிசாமி என உதயநிதி விமர்சித்தார்.
விஜயதாரணியிடம் ரூ.20 கோடி வாங்குங்க: சீமான் காட்டம்!
தொடர்ந்து பேசிய அவர், “உதயநிதி செல்லுமிடம் எல்லாம் கல்லை காட்டுகிறார் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நானாவது கல்லை காட்டினேன் நீங்கள் முட்டி போட்டு என்ன காட்டினீர்கள்? நான் தவழ்ந்து போய் தான் முதலமைச்சர் ஆனேன் என கூறுவது வெக்கமா இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஐபிஎல்லும் அதிமுகவும் ஒன்று, எந்த கட்சிக்காரனுக்கும் அதிமுகவுடைய நிலைமை வரக்கூடாது என்ற அவர், எம்ஜிஆருக்கும் நடிகர் அரவிந்த் சாமிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தான் அதிமுகவினர் என கூறினார்.