தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்து எழுதப்பட்ட நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உதயசங்கர் தெரிவித்துள்ளார்
நாவல், சிறுகதை, அபுனைவு (புனைவில்லாத), புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 24 மொழிகளில் படைக்கப்படும் படைப்புகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான பாலபுரஸ்கார், யுவ புரஸ்கார் விருது பெறுவோரின் பட்டியலை சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது. குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கர் விருது 22 பேருக்கும், யுவ புரஸ்கார் விருது 20 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960ஆம் ஆண்டு பிறந்தவர் எழுத்தாளர் உதயசங்கர். நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களை உதயசங்கர் எழுதியுள்ளார். அவரது ஆதனின் பொம்மை என்ற நாவலுக்கு பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதயசங்கர் கூறுகையில், தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்து எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்த அவர், வரலாற்றை இளையோரிடம் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாவல் எழுதியதாக தெரிவித்துள்ளார்.
உதயசங்கருக்கு இவ்வாண்டுக்கான பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி என மதுரை எம்.பி.யும், காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கீழடியின் தொன்மையை குழந்தைகளின் அனுபவ உலகிற்குள் கொண்டு செல்லும் படைப்பான “ஆதனின் பொம்மை” நூலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு இவ்வாண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்த்துகள் உதய்.” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல், திருக்கார்த்தியல் என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களின் உலகம் உள்ளிட்டவை பற்றி எழுதப்பட்ட திருக்கார்த்தியல் கதைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த எழுத்தாளர் ராம்தங்கம், ராஜவனம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். தன்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்வாக உள்ளதாக ராம்தங்கம் தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமியின் தலைவர் ஸ்ரீ மாதவ் கவுசிக் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் பாலபுரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுதா மூர்த்தி (ஆங்கிலம்), சூர்யநாத் சிங் (ஹிந்தி), ரோதிந்திரநாத் கோஸ்வாமி (அஸ்ஸாமி), ஷ்யாமல்காந்தி தாஸ் (பெங்காலி), பிரதிமா நந்தி நர்சரி (போடோ), பல்வான் சிங் ஜமோரியா (டோக்ரி), ரக்ஷாபஹேன் பிரஹலாத்ராவ் டேவ் (குஜராத்தி), விஜயஸ்ரீ ஹலடி (கன்னடம்), துக்காராம் ராமா ஷெட் (கொங்கனி) ' (மைதிலி), பிரியா ஏஎஸ் (மலையாளம்), ஏக்நாத் அவ்ஹாத் (மராத்தி), மதுசூதன் பிஷ்ட் (நேபாளி), ஜுகல் கிஷோர் சாரங்கி (ஒடியா), குர்மீத் கார்யல்வி (பஞ்சாபி), கிரண் பாதல் (ராஜஸ்தானி), ராதவல்லப் திரிபாதி (சமஸ்கிருதம்), மான்சிங் மஜி (சந்தலி), தோலன் ராஹி (சிந்தி), உதயசங்கர் (தமிழ்), டி.கே.சதுவுலா பாபு (தெலுங்கு), மற்றும் மதீன் அச்சல்புரி ஆகியோருக்கு பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனிருத் கனிசெட்டி (ஆங்கிலம்), அதுல் குமார் ராய் (ஹிந்தி), ஜிந்து கிதார்தா (அசாமி), ஹமிருதீன் மித்யா (பெங்காலி), மைனோஸ்ரீ டைமரி (போடோ), சாகர் ஷா (குஜராத்தி), மஞ்சுநாயக் சல்லூர் (கன்னடம்), நிகத் நஸ்ரீன் (காஷ்மீர்), தன்வி காமத் பாம்போல்கர் (கொங்கனி), விஷாகா (மலையாளம்), விஸ்வநாத் (மராத்தி), நைனா அதிகாரி (நேபாளி), சந்தீப் (பஞ்சாபி), தேவிலால் மஹியா (ராஜஸ்தானி), பாபி துடு (சந்தலி), மோனிகா ஜே பஞ்வானி (சிந்தி), ராம் தங்கம் (தமிழ்), ஜானி தக்கேதாசிலா (தெலுங்கு), தீரஜ் பிஸ்மில் ( டோக்ரி) மற்றும் தௌஸீப் பரேல்வி (உருது) ஆகியோருக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரி, மைதிலி மற்றும் சமஸ்கிருதத்திற்கான யுவ புரஸ்கார் மற்றும் மணிப்பூரி மொழிக்கான பாலபுரஸ்கார் விருது பின்னர் அறிவிக்கப்படும் என சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது. ஒடியாவுக்கான யுவ புரஸ்கார் மற்றும் காஷ்மீரிக்கான பாலபுரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
