ஓடிக் கொண்டிருந்தபோதே மின்சார ரயில் இரண்டாக பிரிந்த சம்பவம் தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் நடந்துள்ளது. இந்த விபத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை நம்பி உள்ளனர். 

இன்றும் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயங்கும் மின்சார ரயில், ஊரப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, பெட்டிகளை இணைக்கும் இணைப்பு சங்கிலிகள் இரண்டாக உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஓடிக்கொண்டிருந்தபோதே ரயில் பெட்டிகள் பிரிந்த சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்து குறித்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். துண்டான இணைப்பு பெட்டிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர். இந்த விபத்தால், சுமார் 1 மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் ரயில் சேவை சீரானது.