திருவண்ணாமலை,

முதியோர் உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு செய்த ஆரணி தாலுகா இளநிலை உதவியாளர், மற்றும் உதவியாளார் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆரணியைச் சேர்ந்த பிரபாகர் (35), ஆரணி தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகவும், தேவானந்தம் (40) உதவியாளராகவும் பணிபுரிந்து வந்தனர். முன்னாள் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுரேஷ் பணியில் இருந்தபோது அவரின் கணினி இரகசிய குறியீட்டை இருவரும் கள்ளத்தனமாக தெரிந்து வைத்துள்ளனர்.

யாரும் இல்லாத நேரத்தில் அவரின் இரகசிய குறியீட்டை பயன்படுத்தி தேவானந்தம், பிரபாகர் ஆகியோருக்கு தெரிந்த நபர்கள், தகுதியில்லா நபர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். மேலும் தகுதியான நபர்களுக்கு உதவித்தொகையை இரத்து செய்துமுள்ளனர்.

இதனால் உதவித்தொகை பெற தகுதியான நபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். தகுதியில்லாத நபர்கள் உதவித்தொகை பெற்றுச் செல்ல இவர்கள் காரணமாய் இருந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முதியோர் உதவித் தொகை பெறுவோர் இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்யாறு உதவி ஆட்சியர் பிரபுசங்கர் ஆரணி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதியோர் உதவித்தொகை வழங்குவதில் குளறுபடி நடந்திருப்பதும், அலுவலகத்தில் பணிபுரியும் தேவானந்தம், பிரபாகர் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி செய்யாறு உதவி ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவுக்கு பரிந்துரைச் செய்தார். அதன்பேரில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆரணி அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவை துறையிலும் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் புகார் அளித்துள்ளனர். நில அளவை துறையை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.