Asianet News TamilAsianet News Tamil

50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டே மாணவிகள்; தலைமை ஆசிரியர்தான் பாடம் எடுக்கிறார்…

Two students in the government primary school for over 50 year
Two students in the government primary school for over 50 year
Author
First Published Jun 16, 2017, 8:09 AM IST


திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அரசுத் தொடக்கப் பள்ளியில் இந்தாண்டு இரண்டே மாணவிகள் சேர்ந்துள்ளனர். ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் இல்லாததால் தலைமை ஆசிரியரே அவர்களுக்கு பாடம் எடுக்கிறார்,

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 99 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.

ஆங்கிலக் கல்வி மற்றும் தரம் போன்ற காரணங்களால் குழந்தைகளின் பெற்றோர் இங்குள்ள அரசு பள்ளியில் சேர்க்க மறுத்து தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கின்றனர். இதனால் வருடா வருடம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வேகமாய் குறைந்து கொண்டே செல்கிறது.

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியூர்களில் தங்கியிருந்து வேலைப் பார்த்து வருவதால் குடும்பத்தினரையும் கையோடு அழைத்துச் சென்று விடுகின்றனர்.

எனவே, கிராம பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் முதியவர்கள் மட்டுமே உள்ளனர். இதுவும் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணம்.

இந்த நிலையில் ஆர்.வெள்ளோடு ஊராட்சி அய்யம்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 100–க்கும் மேற்பட்டோர் படித்தனர்.

காலப்போக்கில் அந்தப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வந்தார். அவருக்கு இரண்டு ஆசிரியர்கள், இரண்டு சத்துணவு ஊழியர்கள் என நான்கு பேர் பணிபுரிந்து வந்தனர்.

இதனையொட்டி இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டார். மேலும், சத்துணவு ஊழியர்களும் மாற்றப்பட்டனர்.

இந்தக் கல்வியாண்டில் இரண்டு மாணவிகள் மட்டுமே பள்ளியில் சேர்ந்தனர். தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே அவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றார்.

மேலும், சத்துணவு ஊழியர்கள் மாற்றப்பட்டதால் இரண்டு மாணவிகளுக்கும் மதிய உணவு கொடுப்பதில்லை. இந்தப் பள்ளியில் சேர மாணவர்கள் ஆர்வம் கொள்ளாததால் பள்ளியை மூடும் நிலை உள்ளது.

எனவே, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களும், தலைமை ஆசிரியரும் கேட்டுக் கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios