மின் கம்பம் பொறுத்தும் பணி நடைபெற்ற போது, பைக்கில் சென்றவரின் கழுத்தை மின் வயர் அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கழுத்தை அறுத்த மின் கம்பி

மதுரை தத்தனேரி பிரதான சாலையை அகலப்படுத்தும் பணிக்காக மின்வாரியத்தின் சார்பில் புதிய மின் கம்பங்கள் பொறுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.இதில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். ஒரு கம்பத்தில் இருந்து மற்றொரு கம்பத்திற்கு மின் வயர்களை மாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது பணியின்போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மின்கம்பிகளை அலட்சியமாக தொங்கவிட்டுள்ளனர். சாலையில் இரு சக்கர வாகனத்தில் மதுரை கூடல்நகர் பகுதியை சேர்ந்த இருதய ஜெரால்ட் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்தபோது வண்டியை ஓட்டிசென்ற ஜெரால்டின் கழுத்தில் மின்வயர் இறுக்கியுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் விசாரணை

மின் கம்பி ஜெரால்டின் கழுத்தை அறுத்ததால் பைக்கில் இருந்து இரண்டு பேரும் தடுமாறி கீழே விழுந்துள்ளார். கழுத்தில் மின் கம்பி அறுத்து படுகாயம் ஏற்பட்ட நிலையில் காயமடைந்த இருவரும் தத்தனேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விபத்து குறித்து மின்வாரிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். மின் கம்பியால் ஏற்பட்ட காயம் தீவிரமாக இருந்திருந்தால் உயிர் இழக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.