திருவள்ளூர்

மகனை வெட்டி கொன்றவர்களை பழிவாங்க நாட்டு வெடிகுண்டு வாங்கிக்கொண்டு பேருந்தில் வந்த தந்தை உள்பட இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலையில் காவலாளர்கள் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பாவரத்தில் இருந்து வந்த மினி பேருந்தை மடக்கி சோதனை நடத்தினர்.

அதில், தலையாரிபாளையத்தைச் சேர்ந்த கோதண்டன் (58), கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (42) ஆகியோரின் பைகளை சோதனையிட்டதில், ஒரு நாட்டு வெடிகுண்டு, ஒரு பட்டா கத்தி ஆகியவை இருந்தன. 

இதனையடுத்து இருவரையும் அங்கேயே காவலாளர்கள் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். 

அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் நடத்திய விசாரணையில், கோதண்டன் கும்மிடிப்பூண்டியில் ரெளடியாக இருந்த தினக்குமாரின் தந்தை என்பது தெரிய வந்தது. 

தினக்குமார் கடந்தாண்டு சிறுபுழல்பேட்டை பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கொலையில் தொடர்புடையவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன், கோதண்டன் நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்துள்ளார் என்பது உறுதியானது. 

இந்த நிலையில், நாட்டு வெடிகுண்டு எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் நால்வர் அடங்கிய குழுவினர் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு கண்டறியும் கருவிகளின் உதவியோடு நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த வெடிகுண்டு கையெறி குண்டு வகையைச் சேர்ந்தது என்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் அந்த குண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், 100 கிராம் எடையுள்ள அந்த குண்டு பேருந்தில் கொண்டுவரப்பட்டபோது தவறி விழுந்திருந்தால் கூட வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வெடிகுண்டை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அங்கு செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த வெடிகுண்டை அவர்கள் எங்கிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து காவலாளர்கள் தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.