அரிமளம்,

அரிமளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில், கைதவறி வெடிமருந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலியானார்கள். பட்டாசு தொழிற்சாலை உரிமையாளரின் மனைவி உள்பட ஐவர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி அருகே உள்ள கீழாநிலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (55). இவர் சுமார் 45 வருடங்களாக வாணவெடி தயார் செய்யும் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றை, ஸ்ரீராம் நகர் பகுதியில் நடத்தி வருகிறார்.

இந்தத் தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மருந்து பொருட்களையும், மற்றொரு அறையை தயாரிக்கப்பட்ட வெடிகளை சேமித்து வைக்கும் குடோனாகவும் பயன்படுத்துகிறார். இந்த அறைகளின் முன்புள்ள இடத்தில் வெடிகளை தொழிலாளர்கள் தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு பணியாற்றிய கீழாநிலைக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ஆறுமுகம் (45) மற்றும் வெள்ளையம்மாள் (32) ஆகியோர் வெடிமருந்து குடோனில் இருந்து வெடிமருந்து நிரப்பிய பெட்டியை தூக்கிக் கொண்டு வெடி தயாரிக்கும் இடத்திற்கு வந்தனர்.

அப்போது அவர்கள் கையில் இருந்த பெட்டி கை தவறி கீழே விழுந்தது. இதில் வெடிமருந்து வெடித்து சிதறியது. இதனால் வெடி வைத்திருக்கும் குடோனில் தீப்பிடித்து, அதில் இருந்த வெடிகளும் வெடித்துச் சிதறியதில் அந்த இடமே அதிர்ந்தது.

இதில் வெடிமருந்து பெட்டியை எடுத்து வந்த ஆறுமுகம், வெள்ளையம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் குணசேகரனின் மனைவி மல்லிகா (45), இவர்களது மகள் விஜயலெட்சுமி (30), அவரது மகன் கிஷோர் (3), செல்வம் மனைவி செல்வி (43), சீத்தாராம் மனைவி ஜெயலெட்சுமி (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

வெடி விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து கே.புதுப்பட்டி காவலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன், துணை காவல் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் இறந்த ஆறுமுகம், வெள்ளையம்மாளின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வெடி விபத்தில் படுகாயம் அடைந்த மல்லிகா, விஜயலெட்சுமி, கிஷோர், செல்வி, ஜெயலெட்சுமி ஆகியோர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். பின்னர், அவர்கள் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெடி விபத்து குறித்து கே.புதுப்பட்டி காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிமளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.