Two people arrested for murdered the textile owner
சேலம்
சேலத்தில் விசைத்தறி அதிபரை இரும்புக் கம்பியால் தாக்கில் கொலை செய்த இருவரை குண்டர் சட்டத்தில் காவலாளர்கள் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இராமாபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி அதிபர் கோபால் (53).
கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி கோபால் தனது வீட்டின் முன்பு சுற்றுச்சுவர் கட்டும் பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருடைய உறவினர் குணசேகரன் (34) மற்றும் ரகுநாதன் (28) உள்பட ஆறு பேர் வந்தனர்.
பின்னர் அவர்கள், சொத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேசியதால் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே ஆறு பேரும் சேர்ந்து கோபாலை தாக்கியுள்ளனர். மேலும், ஆத்திரமடைந்த குணசேகரன் இரும்புக் கம்பியால் கோபாலின் தலையில் அடித்தாராம்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோபால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுதொடர்பாக மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் ராஜாரணவீரன் வழக்குப்பதிந்து குணசேகரன், ரகுநாதன் ஆகியோரை கைது செய்தார்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குணசேகரன், ரகுநாதன் ஆகியோரை குண்டர் சட்ட த்தில் கைது செய்ய மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் ராஜாரணவீரன், காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சம்பத்துக்கு பரிந்துரை செய்தனர்.
இதனையேற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள இருவரிடமும் காவலாளர்கள் வழங்கினர்.
