சேலம்

சேலத்தில் ஓடும் இரயிலில் நகைப் பறித்த வழக்கில் மேலும் இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். வாரங்கல் மாவட்டத்தில் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தவர்களை காவல்துறையினர் சென்று கைது செய்து அழைத்து வந்தனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக புதுடெல்லிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கேரள விரைவு இரயில் சென்று கொண்டிருந்தது. சேலம் அருகே அந்த இரயில் சென்றபோது சிக்னலை துண்டித்து இரயிலுக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் அவர்கள் இரயிலில் ஐந்து பெண்களிடம் 17 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சேலம் இரயில்வே காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகை பறிப்பு தொடர்பாக மராட்டிய மாநிலத்தை சுனில் ஹூல்லப்பா போஸ்லே, அமர் மோகன் காலே, யோகீஸ், நாகேஷ் போஸ்லே ஆகிய நால்வரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மராட்டிய மாநிலம் ஓஸ்மானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த நாகநாத் கல்பா போஸ்லே (35), சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரோகேஸ் சந்திரசிண்டே (25) உள்பட சிலரை காவலாளர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நாகநாத் கல்பா போஸ்லே, ரோகேஸ் சந்திரசிண்டே ஆகியோர் வாரங்கல் மாவட்டம் கம்மம் காவலாளரால் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சேலம் இரயில்வே காவலாளர்கள் அங்கு சென்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரையும் ஓடும் இரயிலில் நகைப்பறித்த வழக்கில் கைது செய்து சேலம் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து நாகநாத் கல்பா போஸ்லே, ரோகேஷ் சந்திரசிண்டே ஆகிய இருவரையும் நேற்று காவலாளர்கள் சேலம் 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அப்போது அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சண்முக பிரியா உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவலாளர்கள் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.