விழுப்புரம்

விழுப்புரத்தின் பல்வேறு பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு பைக்குகளை  காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அந்திலி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (33). இவர் கடந்த 24-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் திருவெண்ணெய்நல்லூர் வந்தார். 

அப்போது, அங்குள்ள டாஸ்மாக் சாராயக் கடையின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்துவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். 

இதேபோல பெரியசெவலையை சேர்ந்த மூர்த்தி (54) என்பவர் அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். 

இவைகுறித்த புகார்களின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காவல் ஆய்வாளர் ஜோகிந்தர் தலைமையிலான காவலாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னசெவலை அரசு கலைக்கல்லூரி முன்பு சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து காவலாளர்கள் விசாரித்தனர். 

அதில் கூறிய பதில்கள் அவர்மீது மேலும் பல சந்தேகங்களை எழிப்பியதால் காவலாளர்கள் அவரை காவல் நிலையம் கொண்டுசென்று விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் டி.மலவராயனூரைச் சேர்ந்த காளிதாஸ் (31) என்பதும், இவர் மடப்பட்டை சேர்ந்த சசிகுமார் (21) என்பவருடன் சேர்ந்து சஞ்சய், மூர்த்தி ஆகியோரது மோட்டார் சைக்கிளை திருடியதும், மேலும் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து காளிதாஸ், சசிகுமார் ஆகியோரை காவலாளர்கள் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஏழு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.