குரங்கணியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மழைநீர் சேமிப்பு தொட்டியில் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தேனியில் நண்பர்கள் 2 பேர் துடி துடித்து உயிரிழப்பு : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக இன்று கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்துவங்கியதால் குரங்கணி அருகே நண்பர்களுடன் சேர்ந்து, குளிப்பதற்காக ஆகாஷ்குமார் (19) மற்றும் அவரது நண்பரான பாண்டி (25) ஆகிய இருவம் ஒன்றாக இரு சக்கர வாகனத்தில் மலைப்பகுதியான குரங்கணிக்கு சென்றுள்ளனர். அருவியில் குளிக்கும் ஆர்வத்தில் உற்சாகமாக சென்றவர்கள் ஹெல்மெட் அணியாமல் பயணித்துள்ளனர்.

குரங்கனியில் அருவியில் குளிக்க சென்ற நண்பர்கள்

மலைப்பகுதிகளில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நிலையில், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்டு சாலையோரம் இருந்த மழைநீர் சேமிப்பு தொட்டியில் மோதியுள்ளது. இதில் பாண்டியும் ஆகாஷ்குமாரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடி துடித்துள்ளனர். அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் தொலை தொடர்பு சேவை இல்லாத இடம் என்பதால் அப்பகுதி வழியாக வந்தவர்கள் இதுகுறித்து குரங்கணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பயணம்- 2 பேர் பலி

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாண்டி, ஆகாஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் அஜாக்கிரதையாக அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கி இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கி மரணம் அடைந்த சம்பவம் போடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுவயதில் இருந்து எங்கு சென்றாலும் இணைந்து சென்று வந்த நண்பர்கள்,இணைந்தே உயிரிழந்த நிகழ்வு பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.