பெரம்பலூர்

பெரம்பலூரில் அரசு அலுவலர்களை வேலை செய்யவிடாமல் தடுத்ததாக இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிமுத்து மகன் அண்ணாதுரை (35).

இவர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனை, திங்கள்கிழமை இரவு சந்தித்துள்ளார்.

அப்போது மழையால் சேதமடைந்த தனது பகுதிகளைப் பார்வையிட வரவில்லை என்றுக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை வேலை செய்யவிடாமல் தடுத்தாராம்.

இதுகுறித்து, இளங்கோவன், பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்தனர் பாடாலூர் காவலாளர்கள்.

இந்த நிலையில் அண்ணாதுரை தலைமறைவாகிவிட்டார். அவரை காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  

இதேபோல, ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் மகன்கள் குமார் (31), வேல்முருகன் (28) ஆகியோர் இடப்பிரச்சனை தொடர்பாக நாரணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையுன் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தனராம்.

இதுகுறித்து நாராயணசாமி அளித்த புகாரின்பேரில், பாடாலூர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து குமார், வேல்முருகன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.