அணைக்கட்டு

ஒடுகத்தூர் அருகே இரண்டு மூட்டைகளில் நாட்டு துப்பாக்கியின் உதிரி பாகங்கள் மற்றும் வெடிமருந்துகள் வைத்திருந்த இரண்டு பேரை காவலாளர்கள் கைது செய்தனர். மலை கிராமங்களில் உள்ள சமூக விரோதிகளுக்கு கொடுக்க வைத்திருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் 60–க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.

இந்த கிராமங்களில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெறும் ஒன்றாகும்.

இதற்கு தொடர்ந்து பலமுறை நடவடிக்கை எடுத்தாலும் சாராயம் காய்ச்சுவதை காவலாளர்களால் தடுக்கவும் முடியவில்லை. சட்ட விரோத கும்பலை ஒடுக்கவும் முடியவில்லை.

இந்த நிலையில் காவல் கண்காணிப்பாளர் பகலவன் நான்கு பேர் கொண்ட காவல்படையைய் கீழ்கொத்தூர் பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபடுமாறு உத்தரவி பிறப்பித்து இருந்தார். இந்தச் சுற்றுப் பணிக்கு சிறப்பு காவல் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ரஜினிகுமார் தலைமை தாங்கினார்.

முத்துக்குமரன் மலை அடிவார சாலையில், இரண்டு பேர், இரண்டு மூட்டைகளை வைத்து கொண்டு நின்றுக் கொண்டிருந்தனர். சுற்றுப் பணியில் இருந்த காவலாளர்களை பார்த்ததும், அவர்கள் பதற்றம் அடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

காவலாளர்கள் அருகில் நெருங்க அவர்கள் இருவரும் பயத்தில் தப்பிக்க ஓட்டம் பிடித்தனர். அவர்களை காவலாளர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்து பார்த்தனர். அதில், நாட்டு துப்பாக்கி தாயாரிக்க பயன்படுத்தும் உதிரி பாகங்கள் மற்றும் அதை வெடிக்க வைக்கும் வெடிமருந்துகள் போன்றவைகள் இருந்தன.

பின்னர், அவர்களிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி (32), பெரியசாமி (35) என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பிடிபட்ட இரண்டு பேரையும், அவர்கள் வைத்திருந்த உதிரிபாகங்களையும் வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் அப்பாசாமியிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து ரஜினி, பெரியசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் உதிரிபாகங்கள் துப்பாக்கி தயாரிக்க வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறதா? அல்லது மலை கிராமங்களில் உள்ள சமூக விரோதிகளுக்கு கொடுக்க வைத்திருந்தார்களா? என்று கோணங்களில் காவலாளர்கள் விசாரனையை தொடர்ந்து வருகின்றனர்.