10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மதுரை பள்ளியில் பயின்ற இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி சதவிகிதம் 93.80 சதவீதமாகும். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தம் 8,71, 239 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் அசத்திய இரட்டையர்கள்
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வில் பல மாணவர்கள் 100க்கு 100 எடுத்து சாதித்துள்ளனர். அதே நேரத்தில் ஆச்சர்யப்படுத்தும் நிகழ்வும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் இருக்கக்கூடிய ஸ்ரீ சாரதா வித்யா வனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரட்டையர்கள் (மாணவிகள்) ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.மாய ஸ்ரீ. - 475 மதிப்பெண் மகா ஸ்ரீ - 475 மதிப்பெண் பெற்றுள்ளனர்
475 மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்
தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் என ஐந்து பாடங்களில் மதிப்பெண்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் ஒரே மதிப்பெண் ஆக 475 ஐ பெற்றுள்ளனர். இரட்டையர்கள் ஆகிய இவர்கள் இருவரும் மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
