கரூர் அசம்பாவித சம்பவத்தில் சூழ்ச்சி நிகழ்த்தப்பட்டதைப் போன்று ஜனநாயகன் படம் வெளியீட்டிலும் சூழ்ச்சி நடைபெறுகிறது. திமுகவும், பாஜகவும் வேறு வேறு கிடையாதென தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூரைத் தொடர்ந்து இரண்டாவது தொகுதியாக திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதன்படி தனது ஆதரவாளர்களுடன் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் திறந்த வாகனத்தில் நின்றபடி விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கேஸ் சிலிண்டர் பிரச்சினையால் பல டீக்கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இப்படி ஒரு போர் மூலம் இப்படி ஒரு சூழல் உருவாகுமென யாரும் நினைக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு பிரச்சினையென்றால் விமானத்தில் டெல்லி சென்று வருகிறார். கேஸ் தட்டுப்பாட்டை போக்க டெல்லி சென்று வந்து இருக்கலாமே?
சிலிண்டர் மானியம், கரும்புக்கு ஆதார விலை, ரேஷனிலி் கூடுதல் சர்க்கரை, உளுந்து உள்பட 2021ல் வழங்கிய வாக்குறுதிகளையே அவர்கள் முழுமையாக செயல்படுத்தவில்லை. இவர்கள் ஆட்சியில் பள்ளிகளில் கூட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் தான் தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அவல நிலை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.
உங்களுக்காக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் சகோதரனாக நான் வந்திருக்கிறேன். இந்த ஒரு முறை உங்கள் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நான் உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்.
இதே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் வேலை வாங்கித் தருவதாக் கூறி ரூ.12 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார். கரூர் நிகழ்ச்சியில் சூழ்ச்சி நடத்தப்பட்டது போன்று ஜனநாயகன் பட வெளியீட்டுக்கும் கூட்டு சதி நடைபெறுகிறது. திமுக, பாஜக வேறு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான்.
வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு உங்களுக்காக வந்துள்ள எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள். திருச்சி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்யுங்கள். நான் வேறு, அவர்கள் வேறு கிடையாதென பேசினார்.
முன்னதாக சென்னையில் பேசிய விஜய், இது வெறும் விசில் அல்ல, இது ஒரு தலைமுறையின் மாற்றத்திற்கான புரட்சி. எதிர்க்கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் வாக்கை மட்டும் நமது சின்னத்திற்கு அளியுங்கள் (Take the money, but whistle in their ears) என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.


