Tuticorin mintittam new wind Worth Rs 225 crore
தூத்துக்குடி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், கார்பன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக புதிய காற்றாலை மின்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.225 கோடி 80 இலட்சம் என்று துறைமுக பொறுப்புக்கழக தலைவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்த சந்திரபோஸ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், கூறியிருப்பது:
“தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் 21.03.17 – ஆம் தேதி வரை 37.29 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.2 கோடியே 16 இலட்சம் மதிப்பில் சுமார் 4 இலட்சம் சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடிய தெளிப்பான் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.
துறைமுக வளாகத்தில் காற்றின் தரத்தைக் கண்காணிக்க, கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
ரூ.225 கோடியே 80 இலட்சம் மதிப்பில் கார்பன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக 25 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.1 கோடியே 50 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சரக்கு கையாளும் தளங்களில் இருந்து கப்பலுக்குத் தேவையான மின்சார வசதியை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இந்தியாவிலேயே தூத்துக்குடியில்தான் முதன் முறையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் தளங்களில் நிற்கும் கப்பல்களின் டீசல் ஜெனரேட்டரை நிறுத்தி கப்பலுக்கு தேவையான மின்சாரத்தை கப்பல் தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதனால் எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
400 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள், துறைமுக நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை, துறைமுக சரக்கு கையாளும் பகுதி, பல்நோக்கு கொட்டகை, மருத்துவமனை, பள்ளி, மின்சார உட்பிரிவு மற்றும் கண்காணிப்பு கட்டுபாட்டு அறை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.
துறைமுக சரக்கு தளங்கள், சாலைகள் மற்றும் சேமிப்பு இடங்களில் சுத்தம் செய்வதற்கு ரூ.8 கோடியே 60 இலட்சம் மதிப்பில் இரண்டு சுத்தம் செய்யும் எந்திரங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது” என்று அந்த செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.
