Tuticorin explosion against Sterlite plant Students call social networks ...
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துகொள்ள சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்ததை ஏற்று ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மக்கள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், அ.குமரெட்டியபுரம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவ - மாணவிகள், நேற்று கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பயணிகள் விடுதி முன்பு சாலையோரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதனைப் பார்த்து கல்லூரி மாணவ - மாணவிகள், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு போராட்டத்தை தொடங்கினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் தங்களது கைகளில், ஸ்டெர்லைட் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை வைத்து இருந்தனர்.
அவர்கள், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
