ttv concludes to restore double leaf and party Waiting with Plan ...

கரூர்

இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் மீட்டெடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடுவோம் என்றும் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் கரூரில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கரூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசினார். துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், "8 கோடி மக்களின் ஜீவதார பிரச்சினைக்காக நாம் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களுக்கு எந்த திட்டங்களையும் வழங்காமல் மத்திய அரசுக்கு எடுபிடியாக செயல்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டனர். தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் மீட்டெடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறோம்.

அரசு அதிகாரிகள், போலீசார் நடுநிலை தவறி செயல்பட்டால் வருங்காலத்தில் நிச்சயம் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும். கரூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் உச்ச நீதிமன்றம் வரை சென்று தடைபெறுகின்றனர். 

காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் செயல்திட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்ற போது தமிழக அரசு உச்ச நீதிமன்றம் அணுகி விளக்கம் பெறவில்லை. 

வருமான வரி சோதனை, ஆட்சி போய்விடும் பயத்தில் கேட்காமல் விட்டுவிட்டனர். தமிழகத்தில் நடக்கிற ஆட்சி மக்கள் விரோத துரோக ஆட்சி. இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. 

இதில் அதிகாரிகள் நடுநிலை தவறி செயல்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் கரூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அடுத்த மாதம் கிராமம், கிராமமாக, தெருத்தெருவாக சென்று மக்களை சந்திப்போம். 

கரூரில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஊழல்வாதிகள், அவர்களுக்கு துணைபோகிற அதிகாரிகள் பற்றி எடுத்துரைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று அவர் பேசினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பி.லோகநாதன், கரூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர்கள் தாரணி பி.சரவணன், மாலதி நல்லுசாமி, மாவட்ட பொருளாளர் பி.கே.எஸ்.முரளி, 

கரூர் மத்திய நகர செயலாளர் ஆர்.எஸ்.ராஜா, கரூர் வடக்கு நகர செயலாளர் எம்.தங்கவேல், கரூர் தெற்கு நகர செயலாளர் நாச்சிமுத்து மோகனசுப்பு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வாங்கல் பி.பாலமுருகன், காதப்பாறை ஏ.தங்கவேல், மண்மங்கலம் ஏ.காளியப்பன், ஊராட்சி செயலாளர்கள் எம்.எஸ்.வடிவேல், 

கிருஷ்ணன், முருகையன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேப்ளாபட்டி மணிமாறன், நெய்தலூர் முத்துகுமரன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.சேவகன், ஒன்றிய பேரூராட்சி செயலாளர் பந்தல் பாலு, 

அவைத்தலைவர் முருகேசன், கடவூர் டி.எஸ்.கண்ணன், கடவூர் உமாமகேஸ்வரி கண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வி.கே.வேலுசாமி, பிரநிதி நவ்ரங் கரூர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.