தங்க புதையலுக்காக கூலித் தொழிலாளியை உயிரோடு புதைத்து நரபலி கொடுக்க முயன்ற மந்திரவாதி உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஓசூர் அருகே நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அத்திப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரப்பா. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவர் விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சந்திரப்பாவைச் சந்தித்த மந்திரவாதி ஒருவர், ஆண் ஒருவரை உயிரோடு புதைத்தால் தங்க புதையல் கிடைக்கும் என்று ஆசை வார்தத்தைக் கூறியுள்ளார். அவரது பேச்சியில் மயங்கியும், தங்கப் புதையல் ஆசையாலும் சந்திரப்பா நரபலிக்கான திட்டத்துக்கு இணங்கியுள்ளார். பின்னர், நரபலிக்கான திட்டத்தை இருவரும் தீட்டியுள்ளனர்.

தன் வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளியான நாகராஜை, குழியில் உயிரோடு புதைத்து நரபலி கொடுக்க இவர்கள் முடிவு செய்தனர். இவர்களது சதி திட்டத்தை அறிந்த கூலித்தொழிலாளி நாகராஜ், இது குறித்து அத்திப்பள்ளி போலீசாரிடம் புகார் கூறியுள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில், சந்திரப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கூலித்தொழிலாளி நாகராஜை உயிரோடு புதைத்து நரபலி கொடுக்க முயன்றது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து சந்திரப்பா மற்றும் மந்திரவாதியை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்க புதையலுக்காக ஆண் ஒருவரை உயிரோடு குழியில் புதைக்க திட்டம் தீட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.