கரூர்,

கரூர் அருகே இரண்டு மாட்டு வண்டிகள் மீது லாரி அதிவேகமாக மோதியதில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் இருவர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தில் ஒரு மாட்டின் உடலில் கம்பி குத்தியது. மற்றொரு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது..

கரூரை அடுத்த வடுகப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பழனியப்பன் (55), பழனிசாமி (50). இருவரும் மாட்டு வண்டி தொழிலாளர்கள்.

நேற்று முன்தினம் அதிகாலை அந்தப் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக் கொண்டு மதுரை - கரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி இரண்டு மாட்டு வண்டிகள் மீதும் அதிவேகமாக மோதியது. இதில் மாட்டு வண்டிகள் உடைந்து தூள் தூளாக நொறுங்கின. லாரி மோதியதில் இரண்டு மாடுகள் பயங்கரமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

ஒரு மாட்டின் உடலில் இரும்பு கம்பிக் குத்தி வெளியே நீட்டியபடி உயிருக்கு மிகவும் போராடியது. இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மாட்டின் உடலில் குத்தி இருந்த கம்பியை அகற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து பசுபதிபாளையம் காவலாள்ளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் படுகாயம் அடைந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் இருவரையு மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்பட லாரி ஓட்டுநர் குடித்திருந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.