எஸ்.சி.வி

தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பில் கொடி கட்டி பறந்து வந்த எஸ்.சி.வி நிறுவனத்தின் ஆதிக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் சன்  குழுமத்தின் கல் கேபிள்ஸ் உரிமத்தின் கீழ் இயங்கியது தான் எஸ்.சி.வி நிறுவனம் . இதன்  மூலம் தான்   தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டி எங்கும் சன்டியை பார்க்க முடிந்தது.அதாவது  எஸ்சிவி என்பது சன் குழுமத்திற்கு  சொந்தமானது என்பதால், சன் டிவி தான் முதல் அலைவரிசையில் தெரியும்.

மற்ற சேனல்கள் எந்த அலைவரிசையில்  இருக்கிறது  என்பதை கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு  பின்னோக்கி  இருக்கும்.

 ஆதலால்தான் , கேபிள் டி வி என்றாலே அது சன்டிவி தான்,  பல கிராமங்களில் இன்றும் உங்க வீட்ல  சன் டிவி வருதா? என்று  தான் கேள்வி எழுப்புவர். அந்த அளவிற்கு சன் குழுமத்தின்   எஸ்சிவி நிறுவனம் மாபெரும் ஆதிக்கத்தில் இருந்தது .

2012 ஆம் ஆண்டு  அரசு  கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்க  வேண்டி விண்ணப்பம்

இதனை எதிர்த்து தான்,  கடந்த  2012 ஆம்  ஆண்டு தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் அரசு  கேபிள்  நிறுவனம்  கோரிக்கை  வைத்து அதற்கான விண்ணப்பமும் சமர்பித்தது. ஆனால்  அனைத்து தகுதியும் அரசு கேபிள் டிவி.க்கு இருந்தும்  டிஜிட்டல் உரிமம் வழங்க வில்லை.

அதுமட்டுமில்லாமல், மன்மோகன் சிங்கிற்கும் தமிழக  அரசின் சார்பாக,மறைந்த  முன்னாள்  முதல்வர்  ஜெயலலிதா,  அரசு கேபிள்  டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவேண்டும்  என்ற  கோரிக்கையை  வலியுறுத்தி   கடிதம் எழுதினார்  . மேலும், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கினால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கேபிள் சேவையை அளிக்க முடியும் என்ற  கருத்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இருந்தபோதிலும் தனியாரின் வர்த்தக நலனுக்காக டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை என  கருதப்பட்டது.  அதே வேளையில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் 70  ரூபாய் கட்டணத்தில் 100 சேனல்களை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கேபிள்  நிறுவனத்திற்கு  டிஜிட்டல் உரிமம்

இந்த 5  ஆண்டுகளில் கிடைக்காத   உரிமத்தை  தற்போது தான் மத்திய அரசு வழங்கியுள்ளது   அதாவது  அரசு கேபிள்  டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல்  உரிமத்தை  வழங்கியது.

மாநில  அரசு   கேபிள்   நிறுவனத்திற்கு  டிஜிட்டல் உரிமம் கிடைப்பது  இதுதான் முதல் முறை என்பது குறிபிடத்தக்கது. இதன் மூலம்   தமிழக மக்கள்  குறைந்த விலையில்,  டிஜிட்டல்  சேவையை   பெறுவார் என்பது  குறிப்பிடத்தக்கது .  அதுமட்டுமின்றி, குறைந்த கட்டணத்தில்  டிஜிட்டல் சேவை  மூலமாக  5௦௦ சேனல் வரை   பார்க்க முடியும் என்பது   குறிப்பிடத்தக்கது .

இதற்காக தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு  தனது   நன்றியையும் தெரிவித்துள்ளார். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம்  கிடைத்ததால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .