திருச்சி மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சியில் மலைக்கோட்டை அருகே உள்ள தஞ்சை குளத்தெருவில் மூன்று மாடி கட்டிடம்  ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், மூன்று வாகனங்களில் வந்த 20 மீட்புப்படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சுமார் பத்து பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் போலீசார் மற்றும் மீட்புப்படையினருடன், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். 

கட்டிடங்களை தகர்த்து சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி இளைஞர் ஒருவரும் அவரது 3 வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீட்டுப் பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.